காதலித்த பெண் என்ஜினீயரை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
காதலித்த பெண் என்ஜினீயரை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
காதலித்தனர்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தியாகராஜ நகர் விளந்தை கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் பாலமுருகன்(வயது 26). ஏ.சி. மெக்கானிக். இவரும், 26 வயது பெண் என்ஜினீயர் ஒருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் 2 பேரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்கள் ஒரே அறையில் ஒன்றாக தங்கி, வேலைக்கு சென்று வந்ததாகவும், கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலமுருகன், தனக்கு திருமணம் செய்வதற்காக வீட்டில் பெண் பார்த்து வருவதாக, அந்த பெண் என்ஜினீயரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர், என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்து விட்டு, தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறாயே? என்று கேட்டுள்ளார். அதற்கு பாலமுருகன், எங்கள் வீட்டில் உன்னை நான் திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை. எனவே நீ வேறு ஒருவரை திருமணம் செய்து கொள், என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கைது
மேலும் பாலமுருகன், தனது வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் என்ஜினீயர் தனது பெற்றோருடன் வந்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிந்து, பாலமுருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.