மகனை கிணற்றில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை


மகனை கிணற்றில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை
x

சேந்தமங்கலம் அருகே மகனை கிணற்றில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீஸ் விசாரணையில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி கொண்டப்ப நாயக்கனூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவர் நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கீதா (22). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ரித்வின் யாதவ் (3) என்ற மகன் இருந்தான்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கீதா மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இருந்தால் மனவேதனை அதிகரிக்கும் என்பதால் கீதா வளையப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி படித்து வந்தார்.

விசாரணை

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொண்டப்பநாயக்கனூருக்கு மகனுடன் சென்ற கீதா அங்குள்ள விவசாய கிணற்றில் மகனை தூக்கி வீசி கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கணவர் வீடு

விசாரணையில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது. கொண்டப்பநாயக்கனூரில் நேற்று முன்தினம் பட்டாளம்மன் கோவில் பண்டிகை நடந்தது. இதனால் கீதாவின் மாமனார் வளையப்பட்டிக்கு சென்று மருமகள், பேரனை கொண்டப்ப நாயக்கனூருக்கு அழைத்து வந்தார். அப்போது கீதா தான் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த வீட்டை வேதனையுடன் பார்த்து சென்றதாக தெரிகிறது.

இதன்பின்னரே மகனை கொன்று அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.


Next Story