ஓடும் பஸ்சில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை


ஓடும் பஸ்சில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
x

5 பெண் குழந்தைகளின் தாயான இளம்பெண், ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை,

மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். கோவையில் ஒரு நிறுவனத்தில் பிட்டராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி (வயது 31). இவர்களுக்கு சங்கீதா (12), விஜயதர்சினி (10), தேன்மொழி (8), சண்முகப்பிரியா (5), பாண்டி சிவானி (3) என 5 பெண் குழந்தைகள் உள்ளனர். நாகலட்சுமி 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். மையிட்டான்பட்டி கிராமத்தில் அவர் 100 நாள் வேலைதிட்ட பணித்தள பொறுப்பாளராக 1½ ஆண்டாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று அந்த ஊரில் இருந்து பகல் 11.30 மணி அளவில் மதுரை பெரியார் நிலையம் நோக்கி புறப்பட்ட அரசு டவுன் பஸ்சில் நாகலட்சுமி, தன்னுடைய, 2 பெண் குழந்தைகளுடன் ஏறினார்.

கண்ணீர் ததும்ப மிகவும் சோகமாக காணப்பட்ட அவர், ஒரு இருக்கையில் குழந்தைகளுடன் அமர்ந்து இருந்தார். அந்த பஸ் சிவரகோட்டை அருகே அனுமன் கோவில் பகுதியில் வந்தது.

ஓடும் பஸ்சில் இருந்து குதித்தார்

அப்போது, தனக்கு அருகில் இருந்தவர்களிடம் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு, சட்டென்று முன்புற வாசல் பகுதிக்கு வந்த நாகலட்சுமி, திடீரென ஓடும் பஸ்சில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் குதித்துவிட்டார். இதைபார்த்ததும் பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அலறினார்கள். பஸ் உடனே நிறுத்தப்பட்டது. சாலையில் ரத்தவெள்ளத்தில் நாகலட்சுமி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

உடனே ஆம்புலன்ஸ் மூலம் மற்ற பயணிகள் நாகலட்சுமியை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நாகலட்சுமி சற்று நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் முதல்கட்ட விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

100 நாள் வேலைதிட்ட பணிக்கு வரக்கூடாது என நாகலட்சுமிக்கு சமீபகாலமாக தொந்தரவுகள் இருந்துவந்ததாக தெரிகிறது. குறிப்பாக மையிட்டான்பட்டி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 2 பேரும், பஞ்சாயத்து செயலர் முத்துவும் இந்த பணிக்கு நீ வரக்கூடாது, அந்த பணியை உனக்கு தர முடியாது என மிரட்டினராம். இதுகுறித்து நாகலட்சுமி ஏற்கனவே கள்ளிக்குடி போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரியவருகிறது. எனவே அந்த 3 பேரும் சேர்ந்து மீண்டும் நாகலட்சுமியிடம், போலீசில் புகார் அளித்தது பற்றி அவதூறாக பேசி தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி நேற்று கலெக்டரிடம் புகார் அளிக்க வேண்டும் என நினைத்து ஊரில் இருந்து நாகலட்சுமி புறப்பட்டுள்ளார். மூத்த 3 மகள்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு, சண்முகப்பிரியா, பாண்டிசிவானி ஆகிய குழந்தைகளை தன்னோடு அழைத்துக்கொண்டு வந்தபோதுதான், ஓடும் பஸ்சில் இருந்து நாகலட்சுமி குதித்து உயிரைவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கலெக்டருக்கு கடிதம்

மேலும் நாகலட்சுமி கைப்பையில், கலெக்டருக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் மீட்டுள்ளனர். அதில், மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை பொறுப்பாளராக பணிபுரிய என்னை கலெக்டர்தான் நியமித்தார். ஆனால், அந்த வேலையை எனக்கு கொடுக்கமாட்டேன் என்று அந்த ஊர் வார்டு மெம்பர்கள் வீரக்குமார், பாலமுருகன் மற்றும் பஞ்சாயத்து செயலர் முத்து ஆகியோர் என்னை மிகவும் தவறாக பேசினார்கள். நான் கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இதுபற்றி புகார் அளித்தேன். இதை அறிந்து ஏன் புகார் கொடுத்தாய் என்று திட்டி தற்கொலைக்கு தூண்டினர்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் 5 பெண் குழந்தைகளும் தாயை இழந்து தவிக்கிறார்கள்.

கூடுதல் கலெக்டர் விசாரணை

மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் கூறியதாவது:-

நாகலட்சுமி, கடந்த 3 ஆண்டுகளாக 100 நாள் வேலை திட்டத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர், பணித்தள பொறுப்பாளர் பணி வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். அவருக்கு இந்த பொறுப்பு வழங்குவது குறித்தும், அவரது பணி தகுதி குறித்தும் ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தேன். நாகலட்சுமி மரணம் தொடர்பாக ஊராட்சி செயலர் மற்றும் கவுன்சிலர்கள் தவறு செய்து இருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது தொடர்பாக கூடுதல் கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story