திருத்தணி அருகே கிணற்றில் குதித்து இளம் பெண் தற்கொலை - குடும்பத் தகராறில் விபரீத முடிவு
திருத்தணி அருகே குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் மேல்முருக்கம்பட்டு கிராமத்தில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இங்கு நேற்று மதியம் பெண் ஒருவர் திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த செங்கல் சூளை தொழிலாளர்கள் கிணற்றில் குதித்த அப்பெண்ணை காப்பாற்ற முயன்றனர். நீண்ட நேரம் கிணற்றில் தேடியும் பெண்ணின் உடல் கிடைக்காததால் இதுகுறித்து திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற திருத்தணி போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்த பெண் கீழ் முருக்கம்பட்டு பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் தமிழரசன் என்பவரது மனைவி பிரேமா (வயது 34) என்பதும், நேற்று கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மன வருத்தத்தில் இருந்த பிரேமா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பிரேமாவிற்கு தீபக் (7) என்ற மகனும், ஜனனி (5) என்ற மகளும் உள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.