திருநின்றவூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த வாலிபர் கைது


திருநின்றவூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த வாலிபர் கைது
x

திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தென்னை மரக்கட்டையை வைத்த வாலிபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்

திருவள்ளூர்

திருநின்றவூரில் இருந்து கடந்த 7-ந்தேதி இரவு 3 மணியளவில் நெமிலிச்சேரி நோக்கி சரக்கு ரெயில் வண்டியின் எஞ்ஜீன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் சுமார் 3 அடி நீளம், 20 கிலோ எடை கொண்ட தென்னை மரக்கட்டை ஒன்று இருப்பதை என்ஜின் டிரைவர் மதியழகன் கண்டுப்பிடித்தார். உடனே சுதாரித்துக்கொண்டு என்ஜினை நிறுத்தி, தண்டவாளத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தென்னை மரக்கட்டையை எடுத்து அப்புறப்படுத்தினார்.

பின்னர், ஆவடி ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, சென்னை சென்டிரல் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சில நாட்களுக்கு முன்னர் தண்டவாளத்தை ஒட்டியுள்ள ஒரு வீட்டை இடித்து அகற்றும் போது அங்கு இருந்த தென்னை மரத்தை அவர்கள் துண்டுகளாக வெட்டி ரெயில் தண்டவாளத்தின் ஓரமாக கொட்டியது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிவதை ரெயில்வே போலீசார் கண்டறிந்தனர். அப்போது, அவரைப்பிடித்து விசாரித்தனர். அதில், முன்னுக்கு பின் முரணான வகையில் பதில் அளித்தார். பின்னர், அவரை ரெயில்வே போலீஸ்சார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், திருநின்றவூரை சேர்ந்த பாபு (வயது 42) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 7-ந்தேதி குடிபோதையில் தண்டவாளத்தின் மீது தென்னைமரக் கட்டையை வைத்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, பாபுவை போலீசார் கைது செய்தனர்.


Next Story