திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா கோலாகலமாக தொடக்கம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா கோலாகலமாக தொடங்கியது. வெளிமாநில, மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருத்தணி,
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா நேற்று ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. ஆடி அஸ்வினியை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், பச்சை மாணிக்க கல், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
அப்போது அவர்கள் பக்தி பரவசத்துடன் மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை திருக்குளம் அருகே உள்ள மலைப்படிகள் வழியாக உற்சாகமாக ஆடிக்கொண்டு அரோகரா அரோகரா என மயில் காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்து மேளதாளங்கள் முழங்க மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முழுவதும் 1,600-க்கும் மேற்பட்ட போலீசார் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் தலைமையில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) ஆடிப்பரணியும், நாளை (புதன்கிழமை) ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழா நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், உறுப்பினர்கள் உஷா, மு.நாகன், சுரேஷ்பாபு, மோகனன், கோவில் துணை ஆணையர் விஜயா மற்றும் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.