திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை கோலாகலம்


திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை கோலாகலம்
x

திருத்தணி முருகன் கோவிலில் அடிக்கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர்

திருத்தணி,

முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக விளங்கும் திருத்தணி முருகன் கோவிலில் நேற்று முக்கிய விழாவான ஆடிக்கிருத்திகை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஆடி கிருத்திகை திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் முருக பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். விழாவையொட்டி மலையடிவாரத்தில் உள்ள நல்லாங்குளம், சரவணப் பொய்கை திருக்குளத்தில் பக்தர்கள் நீராடிவிட்டு படிகள் வழியாக பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மலர் காவடி, மயில் காவடிகளுடனும், அலகு குத்தியும் அரோகரா என முழக்கமிட்டபடி பக்தி பரவசத்துடன் வந்து மலைக்கோவிலில் முருக பெருமானை வழிபட்டனர்.

இந்நிலையில் திரைப்பட நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா தனது அண்ணனுடன் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வந்து மலைக்கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றினார். தொடர்ந்து முருகனை தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, 'ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை விழாவிற்கு திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வந்து நேர்த்தி கடனை செலுத்தி வருகிறேன். முருகனுக்கு காவடி எடுத்து வருவதால் தன்னுடைய வேண்டுதல்கள் நிறைவேறுகிறது' என தெரிவித்தார்.

கோவிலுக்கு வந்த ரோஜாவை பார்த்த பக்தர்கள் அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் ரோஜாவை போலீசார் பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர்.

ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு, திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தலைமையில் கோவில் அதிகாரிகள் முருகப்பெருமானுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் சீர்வரிசைகளை கொண்டு வந்தனர். அந்த சீர்வரிசைகளை திருத்தணி முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், துணை ஆணையர் விஜயா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுரேஷ்பாபு, மு.நாகன் மற்றும் கோவில் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து சீர்வரிசைகள் சாமிக்கு சாத்தப்பட்டன.

ஆடிக்கிருத்திகையையொட்டி முருகப் பெருமானுக்கு காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு தங்க கவசம், பச்சைக்கல் பதித்த வைரமாலை அணிவிக்கப்பட்டது. ஆடிக்கிருத்திகை முக்கிய நிகழ்வாக மாலையில் நடைப்பெற்ற தெப்பத் திருவிழாவில், மலைக்கோவில் காவடி மண்டபத்தில் இருந்து உற்சவர், வள்ளி, தெய்வானை சமேதராய் தேர் வீதியில் வலம் வந்து படிக்கட்டுகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், துணை ஆணையர் விஜயா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இந்நிலையில் திருத்தணி ஆடிக்கிருத்தை விழா ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். முன்னதாக படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு வந்து, பக்தர்கள் தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சரியாக செய்துள்ளதா என பார்வையிட்டு, பின் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பேட்டி அளித்தபோது கூறியதாவது:- கொரோனா பேரிடர் காலத்திற்குப் பிறகு கோவில் திருவிழாக்களில் அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள். பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு கோவில் தூய்மையாக பராமரிப்பது, கழிப்பிட வசதி, பஸ் வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு தனிகவனம் செலுத்துகிறது என தெரிவித்தார்.


Next Story