திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றம்


திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றம்
x

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் 190-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி வரை 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முதல் நாளான இன்று அவதாரபதியில் காலை 5 மணிக்கு உகப்படிப்பும், பணிவிடையும் நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் அவதாரபதியை ஒரு முறையும், கொடி மரத்தை 5 முறையும் சுற்றி வலம் வந்தது. பின்னர் 7.05 மணிக்கு அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் திருவிழா கொடியேற்றினார்.

தொடர்ந்து 7.30 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடைக்கு பின்னர் அன்னதர்மம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடையும், மாலை 5 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனியும் நடைபெறுகிறது.

திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 11-ம் திருநாளான ஆகஸ்ட் 1-ந் தேதி பகல் 12.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.


Next Story