சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா - நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கடலூர்,
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த 2 விழாக்களின் போது மட்டும் மூலவர் நடராஜர் மற்றும் சிவகாம சுந்தரி சுவாமிகள் வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஆனித் திருமஞ்சன தரிசன விழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினசரி காலை, மாலையில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறும். விழாவின் 5-வதுநாளான வருகிற 21-ம் தேதி தெருவடைச்சான் உற்சவம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வருகிற 25-ம் தேதி நடைபெறுகிறது.
ஆனித் திருமஞ்சன தரிசன விழா வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், சித்சபை பிரவேசமும் நடக்கிறது. 28-ம் தேதி இரவு முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.