மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமநாதபுரம்,
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மக்கள் நலப்பணி யாளர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் சேதுராகவன், மாவட்ட பொருளாளர் பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் காந்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தது போன்று இறந்த மக்கள் நல பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.
சட்டமன்றத்தில் ரூ.7 ஆயிரத்து 500 ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில் அரசாணையில் ரூ.5 ஆயிரம் என்று கூறப்பட்டு உள்ளதால் அதனை மாற்றி அரசாணை வெளியிட வேண்டும். மக்கள் நல பணியாளர்கள் சில நிபந்தனையுடன் பணியமர்த்தப்படுவார்கள் என்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
மனு
எந்த நிபந்தனையுமின்றி எங்களை பணியில் அமர்த்த வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமே ஊதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்பட மக்கள் நல பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.