ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் பங்கேற்க முடிவு
ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.
பனைக்குளம்,
தமிழ்நாடு முழுவதும் 12,525 ஊராட்சி தலைவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து மாநில அளவில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். நாளை (புதன்கிழமை) சென்னையில் மாநில அளவில்கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் பாரதிநகரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் வெங்கலக்குறிச்சி செந்தில்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் பட்டணம்காத்தான் சித்ராமருது தீர்மானங்களை எடுத்துக்கூறினார். மாவட்ட பொருளாளர் மேலச்செல்வனூர் முகமது இக்பால், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்புல்லாணி யூனியன் கோகிலா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் மண்டபம் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் என்மனங்கொண்டான் கார்மேகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி.மருது பாண்டியன் கலந்து கொண்டார். கூட்டத்தில் மாவட்ட கூட்டமைப்பு துணை செயலாளர் ராணி கணேசன், மண்டபம் ஒன்றிய கூட்டமைப்பு செயலாளர் புதுமடம் காமில் உசேன், துணை செயலாளர் சிவக்குமார், பொருளாளர் வெள்ளரிஓடை சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அனைத்து ஊராட்சிகளுக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை தங்கு தடையின்றி நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசின் நிதிகளை முறையாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சென்னையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சி தலைவர்களும் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.