ஆருத்ரா மோசடி வழக்கு: வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆர்.கே.சுரேஷ் மனு


ஆருத்ரா மோசடி வழக்கு: வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆர்.கே.சுரேஷ் மனு
x
தினத்தந்தி 27 Sep 2023 11:46 AM GMT (Updated: 27 Sep 2023 12:01 PM GMT)

வங்கி கணக்கு முடக்கத்திற்கு எதிராக ஆர்.கே.சுரேஷ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை,

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு மாதந்தோறும் 25 முதல் 30 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டது. இதனை நம்பி முதலீடு செய்தவர்களின் பணம் பறிபோனது.

இந்த நிறுவனம் சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர்கள் உள்பட 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 13-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே இந்த வழக்கில் திரைப்பட நடிகர்-தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் விசாரணையின் அடிப்படையில் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆர்.கே.சுரேஷ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.சுரேஷ் தரப்பில், ஆருத்ரா மோசடிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

அதே சமயம், வங்கி கணக்கு முடக்கம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வங்கி கணக்கு முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாடும்படி ஆர்.கே.சுரேஷ் தரப்புக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.


Next Story