ஆவின் டிலைட் வகை பாலை குளிர்சாதன வசதி இல்லாமல் 90 நாட்கள் வரை பயன்படுத்தலாம் - பால்வளத்துறை அமைச்சர்


ஆவின் டிலைட் வகை பாலை குளிர்சாதன வசதி இல்லாமல் 90 நாட்கள் வரை பயன்படுத்தலாம் - பால்வளத்துறை அமைச்சர்
x

ஆவின் டிலைட் வகை பாலை குளிர்சாதன வசதி இல்லாமல் 90 நாட்கள் பயன்படுத்தலாம் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

ஆவின் டிலைட்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை தமிழக பால்வளத்துறை அமைச்சரும், தி.மு.கவின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆவின் டிலைட் என்ற மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாமல் 90 நாட்கள் வரை வைத்து இதனை பயன்படுத்தலாம். எந்தவித வேதிப்பொருட்களும் சேர்க்காமல் நவீன தொழில்நுட்ப முறையில் இந்த ஆவின் டிலைட் பாலை செயல்படுத்துகின்றோம். சாதாரணமாக தயாரிக்கப்படும் பால் ஓரிரு நாட்கள் குளிர்விப்பானில் வைத்து பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மேற்பட்ட நாட்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த பாலை 90 நாட்கள் குளிர்விப்பானில் வைக்காமலேயே பயன்படுத்தலாம். எந்தவித கெமிக்கலும் சேர்க்கப்படவில்லை.

மக்களின் சேவைக்காக

சுகாதாரத்துக்கு எந்தவித கெடுதலும் இல்லை. இந்த பாலை பயன்படுத்துவதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இது வியாபார நோக்கத்தோடு செய்யப்படவில்லை. பொதுமக்களின் சேவைக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னேற்பாடு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை கூட்டத்தை ஒரு மாதத்திற்கு முன்பே மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டி அனைத்து பகுதிகளில் இருக்கக்கூடிய ஒன்றிய, நகர, பேரூர் அலுவலகங்களிலும் பேரிடர் மேலாண்மை தொடர்பான முன்னேற்பாடு கூட்டங்களை நடத்தியதன் அடிப்படையில் பேரிடர் காலங்களுக்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை காலங்களில் எப்படிப்பட்ட பேரிடர்களையும் எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவருடன் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண், திருவள்ளூர் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன், திருவள்ளூர் சப் கலெக்டர் மகாபாரதி, திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன்.பாண்டியன், நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story