ஆவின் பால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்


ஆவின் பால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்
x

மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது மிகப்பெரிய தவறு என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஆவின் பால் ஒரு தலைசிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த ஆண்டு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி நான் ஏற்கனவே அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அறிவித்து விட்டேன்.

பால் உற்பத்தியைப் பெருக்குவது, உற்பத்தியாளருடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவது உள்ளிட்டவை முதலமைச்சரின் பரிசீலனையில் உள்ளது, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. அதனை இந்த ஆண்டு 75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பள்ளிகூடங்கள் மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது மிகப்பெரிய தவறு. குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.பியை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மல்யுத்த வீராங்கனைகள் நியாயமான முறையில் போராடினார்கள். அவர்கள் மீது பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story