அரசு போக்குவரத்து கழகங்களில் வருவாயை பெருக்க கண்டக்டர்களுக்கு இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும் - ராமதாஸ்


அரசு போக்குவரத்து கழகங்களில் வருவாயை பெருக்க கண்டக்டர்களுக்கு இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும் - ராமதாஸ்
x

அரசு போக்குவரத்து கழகங்களில் வருவாயை பெருக்க கண்டக்டர்களுக்கு இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருப்பதால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மட்டும் ஒவ்வொரு மாதமும் ரூ.10 கோடி கூடுதல் செலவு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 3,233 பஸ்களில் ஒவ்வொரு சுற்று முறைக்கும் ஈட்ட வேண்டிய வருவாயை அதிகாரிகள் நிர்ணயித்துள்ளனர். இந்த இலக்கு வழக்கமான வசூலை விட 20 முதல் 25 சதவீதம் வரை அதிகமாகும். இந்த இலக்கை எட்டுவது சாத்தியமற்றது. இது டிரைவர், கண்டக்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.

போக்குவரத்து கழகங்களின் செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. இதற்காக கூடுதல் செலவுகளின் பெரும்பகுதியை ஈடுகட்டுவதற்கான தொகையை கண்டக்டர்கள் தான் பயணச் சீட்டு விற்பனை மூலம் ஈட்டித் தர வேண்டும் என இலக்கு நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

அதிக எண்ணிக்கையில் மக்கள் பயணம் செய்யக்கூடிய வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்குதல், அதிகாரிகளின் எண்ணிக்கை, வீண் செலவுகளை குறைத்தல் போன்றவற்றின் மூலம் போக்குவரத்து கழகங்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும்.

நிர்வாக சீர்திருத்தங்களின் மூலம் வருவாயை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து ஒவ்வொரு பஸ்சும் ஒவ்வொரு சுற்றுமுறைக்கும் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story