கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந் தேதி இயற்றப்பட்டது. இதனை முன்னிட்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்க அரசு அறிவித்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
விழிப்புணர்வு பிரசார வாகனம்
நிகழ்ச்சியையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் முன்னிலையில் அரசு அலுவலர்கள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்றனர். தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை கலெக் டர் தொடங்கி வைத்தார். அதே போன்று விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
போலீசார் உறுதிமொழி ஏற்பு
இதே போன்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு ரெயில்வே டி.ஐ.ஜி. விஜயகுமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா, அமைச்சுப் பணி அலுவலக கண்காணிப்பாளர்கள் செல்வக்குமார், மயில்குமார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.