கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில்கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கருக்கலைப்புபெண் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில்கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கருக்கலைப்புபெண் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Oct 2023 7:00 PM GMT (Updated: 13 Oct 2023 7:01 PM GMT)

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கருக்கலைப்பு செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கருக்கலைப்பு செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கருக்கலைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு நடைபெறுவதாக கலெக்டர் சரயுவிற்கு புகார் வந்தது. இதுகுறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் சுகாதார பணிகள் துணை இயக்குனர், வட்டார மருத்துவ அலுவலர், போலீசார், வருவாய் அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் அடங்கிய குழு ஆய்வு செய்தனர்.

அவர்கள் நரிமேடு பகுதியில் காயத்திரி என்பவரின் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது 3-வதாக கர்ப்பமாகி 3½ மாதங்கள் ஆன நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் வேடி என்ற புரோக்கர் மூலம் ஸ்கேன் டெக்னீசியன் சுகுமாரன் என்பவர் மூலம் சட்டத்திற்கு புறம்பாக ஸ்கேன் செய்து குழந்தையின் பாலினத்தை பெண் என கண்டுபிடித்தது தெரியவந்தது.

ஆதாரங்கள்

தொடர்ந்து அவர் கடந்த 7-ந் தேதி காவேரிப்பட்டணம் கொசமேடு எம்.எஸ். நகரில் உள்ள உமாராணி என்பவரிடம் மாத்திரைகள், உபகரணங்கள் மூலம் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் காவேரிப்பட்டணம் எம்.எஸ். நகரில் வசிக்கும் உமாராணி வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். இதில் கருக்கலைப்பு செய்வதற்கான ஆதாரங்களை கைப்பற்றினர். மேலும் அவரது வீட்டுக்கு அருகில் 3 பேர் இருந்தனர். அவர்களை அதிகாரிகள் விசாரித்தபோது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணியும் கருக்கலைப்பு செய்வதற்காக காத்திருந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தை அறிந்த உமாராணி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில், கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையிலான குழுக்கள் 2 மாவட்டங்களிலும் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

வலைவீச்சு

அதில் திருப்பத்தூர் மாவட்டம் பேராணம்பட்டு அருகே விசமங்கலம் அருகில் ஒரு வீட்டில் 5 கர்ப்பிணிகள் இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் என்றும், ஒருவர் தர்மபுரி என்றும், மற்றொருவர் திருப்பத்தூரை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவர்கள் ஸ்கேன் செய்வதற்காக காத்திருந்தது தெரியவந்தது.

மேலும் அவர்களுடன் 3 இடைத்தரகர்களும் இருந்தனர். அவர்களை பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.29 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர். மேலும் ஆன்லைன் மூலமும் ரூ.18 ஆயிரத்து 500 புரோக்கர் வேடிக்கு அனுப்பியதும் தெரிய வந்தது. இதையடுத்து இடைத்தரகர்கள், கர்ப்பிணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது வேடி மற்றும் ஸ்கேன் செய்யும் சுகுமாரன் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story