கருக்கலைப்பு செய்த பெண் திடீர் சாவு: தலைமறைவாக இருந்த மெடிக்கல் உரிமையாளர் கைது


கருக்கலைப்பு செய்த பெண் திடீர் சாவு:  தலைமறைவாக இருந்த மெடிக்கல் உரிமையாளர் கைது
x

ராமநத்தத்தில் கருக்கலைப்பு செய்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவத்தில் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த மெடிக்கல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்


ராமநத்தம்,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி அனிதா(27). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. வர்னிகா, வர்ஷினா என்று 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் 3-வதாக அனிதா கர்ப்பமானார். 4 மாத கர்ப்பிணியாக இருந்த அனிதா, கடந்த மே மாதம் 5-ந்தேதி, கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் உள்ள ஒரு மெடிக்கலுக்கு வந்து, வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்த்துள்ளார். அதில், பெண் குழந்தை என்பது தெரியவந்தது.

கருக்கலைப்பு

இதையடுத்து, கருக்கலைப்பு செய்வது என்று முடிவு செய்து, அதே மெடிக்கலில் வைத்து மெடிக்கல் உரிமையாளரான கச்சிமைலூரை சேர்ந்த சீத்தாராமன் மகன் முருகன் (50) என்பவர் கருக்கலைப்பு செய்துள்ளார்.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு ஆளான அனிதாவை, முருகன் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு அவர் தலைமறைவாகி விட்டார். இதற்கிடையே அனிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இது தொடர்பாக ராமநத்தம் போலீர் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வந்தனர். ஆனால் அவர் 2 மாதமாக தலைமறைவாகவே இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் சிறுபாக்கம் அருகே உள்ள காப்புகாட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜம்பு லிங்கம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று முருகனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.


Next Story