மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
பண்ருட்டி அருகே மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி அருகே வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தில் திருச்சி கருமண்டபம் புதுத்தெருவை சேர்ந்த செபாஸ்டியன் மகன் ஜெரால்டு (வயது 31) என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு தொண்டு நிறுவனம் நடத்தி 10 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம் தலா ரூ.1 லட்சம் வட்டி இல்லா கடன் தருவதாக கூறி, முன்பணமாக ரூ.34 லட்சம் பெற்று மோசடி செய்ததாக தெரிகிறது. இது பற்றிய புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து பண்ருட்டி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே சென்ற அவர் இது வரை கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப் பித்து நீதிபதி மகேஷ் உத்தரவிட்டார். இதையடுத்து மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெரால்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ராஜசேகரன், ஏட்டு பாபு ஆகியோர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சியில் தலைமறைவாக இருந்த ஜெரால்டை நேற்று போலீசார் கைது செய்து, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.