நாகர்கோவிலில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது


நாகர்கோவிலில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:46 PM GMT)

நாகர்கோவிலில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துகோணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் கடந்த 9-6-2011 அன்று அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் மணிகண்டன், பாபு மற்றும் அய்யப்பன் ஆகிய 3 பேர் மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே கோர்ட்டு தண்டனையை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் 3 பேரும் மேல்முறையீடு செய்தனர். வழக்கு விசாரணை நடந்ததால் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐகோர்ட்டு உறுதி செய்து குற்றவாளிகள் 3 பேரும் 2 வார காலத்திற்குள் சரணடைய வேண்டும் என்று கூறியது. ஆனால் அய்யப்பன் மட்டும் சரண் அடைந்தார். மணிகண்டன் மற்றும் பாபு ஆகியோர் தலைமறைவாகிவிட்டார்.

இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 6-ந் தேதி பாபு போலீசில் பிடிபட்டார். இந்த நிலையில் மணிகண்டனை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஒரு ஆண்டுக்கு பிறகு மணிகண்டன் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story