விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று'சில்வர் ஓக்' மரங்களை வெட்டி விற்பனை செய்ய அனுமதி எளிதாக்கப்படும்-வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சில்வர் ஓக் மரங்களை வெட்டி விற்பனை செய்வதற்கான அனுமதி எளிதாக்கப்படும் என்று கோத்தகிரியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சில்வர் ஓக் மரங்களை வெட்டி விற்பனை செய்வதற்கான அனுமதி எளிதாக்கப்படும் என்று கோத்தகிரியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டப்பெட்டு வனசரகத்திற்கு உட்பட்ட ஒன்னதலை வனப்பகுதியில் 11 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்திருந்த நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் அந்நிய நாட்டு மரங்கள் மற்றும் தாவரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக, அங்கு சோலை மர நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் இங்கிலாந்து அரசின் பசுமை நிழற்குடை விருதைப் பெற்ற வனத்துறைக்கு சொந்தமான கோத்தகிரி லாங்வுட் சோலைக்கு சென்றார். அங்கு ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும் சூழல் மையம், சோலை மர நாற்றுகள் தயாரிக்கும் நர்சரி, சூழல் சுற்றுலா அழைத்துச் செல்ல வாங்கப்பட்டுள்ள பேட்டரி வாகனம் ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன், அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று இயற்கை அழகை ரசித்தார். இதையடுத்து அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களில் வளர்த்துள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்டி விற்பனை செய்ய தற்போது வனத்துறை அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. விவசாயிகள் அவ்வாறு சில்வர் ஓக் மரங்களை வெட்ட அனுமதி கோரினால் உடனுக்குடன் அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடைமுறைகள் எளிமையாக்கப்படும்
நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் ஊடுபயிராக வளர்க்கும் சில்வர் ஓக் மரங்களை பிற மாநிலங்களில் அனுமதி எதுவும் பெறாமல் வெட்டி விற்பனை செய்வது போல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த அனுமதி பெறும் நடைமுறையை எளிமையாக்க அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உலகப் புகழ்பெற்ற லாங்வுட் சோலையில் புதர் செடிகள் கூட அகற்றப்படாது. மேலும் இந்த சோலையில் ஏற்கனவே சோலை மர நாற்றுகள் தயாரிக்க நர்சரி இருந்த அதே இடத்தில் மீண்டும் நர்சரி அமைக்கப்படும். தற்போது நர்சரி உள்ள காலியிடத்தில் பல்லுயிர் சூழல் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். இதற்காக தமிழக அரசு ரூ.5 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வேறு எந்த கட்டுமானப் பணிகளும் அங்கு மேற்கொள்ளப்படாது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் கவுதம், வனச்சரகர்கள் செல்வராஜ் (கோத்தகிரி), செல்வகுமார் (கட்டபெட்டு), ராம் பிரகாஷ் (கீழ் கோத்தகிரி) உள்பட வனத்துறை அதிகாரிகள், வனத்துறையினர் மற்றும் போலீசார் பலர் உடனிருந்தனர்.