சிங்காரப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வெல்டிங் தொழிலாளி பலி கல்லூரி மாணவர் படுகாயம்

ஊத்தங்கரை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜொன்ராம்பள்ளியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் திருக்குமரன் (வயது 20). இவர் திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், திருப்பத்தூர் அருகே உள்ள கோடியூரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான சுபாஷ் (20) என்பவரும் மோட்டார் சைக்கிளில் சிங்காரப்பேட்டை- திருவண்ணாமலை சாலையில் கடந்த 3-ந் தேதி இரவு சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை திருக்குமரன் ஓட்டினார். சுபாஷ் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுபாசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். திருக்குமரன் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






