சுபநிகழ்ச்சிக்கு சென்றபோது பரிதாபம்: விபத்தில் கணவர் கண் எதிரே பெண் பலி
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே சுபநிகழ்ச்சிக்கு சென்றபோது கணவர் கண் எதிேர விபத்தில் பெண் பலியானார்.
ஓட்டல் உரிமையாளர்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 40). ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஏலகிரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து நேற்று தனது மனைவி பழனியம்மாள் (35), 2 குழந்தைகளை பஸ்சில் அனுப்பி வைத்தார்.
இதையடுத்து பிரபு மோட்டார் சைக்கிளில் நல்லம்பள்ளி அருகே குறிஞ்சிநகர் பாளையம் சுங்கசாவடிக்கு சென்று மனைவி, குழந்தைகள் வரும் பஸ்சுக்காக காத்து நின்றார். இதனை தொடர்ந்து சுங்கச்சாவடிக்கு பஸ் வந்ததும் ஏலகிரி செல்வதற்காக மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பெண் பலி
அப்போது பாளையம்புதூர் கூட்ரோடு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மொபட் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து பழனியம்மாள் மற்றும் குழந்தைகள் தவறி விழுந்தனர். அந்த சமயம் அந்த வழியாக வந்த மீன்பார கன்டெய்னர் லாரி சாலையில் விழுந்த பழனியம்மாள் மீது ஏறி இறங்கியது. இதனால் அவர் தனது கணவர் கண் எதிரே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பிரபு மற்றும் குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுபநிகழ்ச்சிக்கு சென்றபோது கணவர் கண் எதிேர பெண் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.