பாலங்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து நடக்கும் அபாயம்

திருப்பூர் மாநகர பகுதியில் பாலங்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.
திருப்பூர் மாநகர பகுதியில் பாலங்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.
நிரம்பி வழியும் போஸ்டர்கள்
வாகன ஓட்டிகளின் அலட்சியம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங்களால் மட்டும் விபத்துகள் ஏற்படுவதில்லை. தரமற்ற சாலை, கவனச்சிதறல் ஏற்படுத்தும் விஷயங்களாலும் விபத்துகள் நடக்கின்றன. அந்த வகையில் திருப்பூர் அவினாசி ரோடு மேம்பாலத்தின் இரு பக்கமும் உள்ள தடுப்பு சுவர்களில் அரசியல் கட்சி மற்றும் பல்வேறு விளம்பர போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டு வருகின்றன.
இதனால் பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் போஸ்டர்களின் பக்கம் திரும்பும் போது விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்தில் ஆங்காங்கே சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்த நிலையில் எந்த தடையும் இல்லாத காரணத்தால் பலரும் போட்டி போட்டு போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இதனால் பாலத்தில் போஸ்டர்கள் நிரம்பி வழிகின்றன.
தடை விதிக்கப்படுமா?
இதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் பாலத்தின் கீழ் பகுதியிலும் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. குறிப்பாக பாலங்களில் மிகவும் பெரிய அளவில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. எனவே இதுபோன்று மாநகரில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் இது தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. மேலும், பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதை தடுக்கும் வகையில் சுவர் ஓவியம் வரையப்பட்டது இதனால் அலங்கோலமாக காணப்பட்ட பல சுவர்கள் அழகாக மாறின. எனவே அதிகாரிகள் மீண்டும் இதில் கவனம் செலுத்துவார்களா?.