மோகனூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோதுபாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விவசாயி பலி


மோகனூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோதுபாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விவசாயி பலி
x
தினத்தந்தி 22 Sep 2023 7:00 PM GMT (Updated: 22 Sep 2023 7:00 PM GMT)
நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விவசாயி பலியானார்.

விவசாயி

நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் அருகே உள்ள ரங்கப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது45). இவருடைய மனைவி விஜயலட்சுமி (34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரமேஷ் சிங்கப்பூரில் 16 ஆண்டுகள் பணியாற்றி விட்டு நாடு திரும்பி கடந்த 2 ஆண்டுகளாக சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மோட்டார் சைக்கிளில் கரூர் மாவட்டம் புலியூர் பகுதியை சேர்ந்த தனது நண்பரை பார்க்க சென்றார். பின்னர் இரவில் மழை பெய்தபோது ரமேஷ் புலியூரில் இருந்து வளையப்பட்டி வழியாக நாமக்கல்லுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

பரிதாப சாவு

அப்போது மோகனூர் அருகே சாலை விரிவாக்க திட்டத்தில் பாலம் கட்டும் பணி நடந்த இடத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி பாலத்தின் ஒரு பகுதியில் மோதி கீழே விழுந்தார். இதில் பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததில் படுகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இரவில் மழை பெய்ததால் அந்த வழியாக சென்றவர்கள் இதனை கவனிக்கவில்லை. இதையடுத்து நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் ரமேஷ் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் துர்க்கை சாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக ரமேசின் மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story