தொப்பூர் கணவாயில் சுற்றுலா பஸ்-லாரி மோதி விபத்து;டிரைவர் உள்பட 19 பேர் காயம்
தொப்பூர் கணவாயில் சுற்றுலா பஸ்-லாரி மோதி விபத்துக்குள்ளானதில், டிரைவர் உள்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
நல்லம்பள்ளி:
ஆன்மிக சுற்றுலா
தர்மபுரி மாவட்டம் பிக்கிலிகொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த 52 பேர் ஒன்றிணைந்து சுற்றுலா பஸ் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றுலாவை முடித்து கொண்டு நேற்று காலை சுற்றுலா பஸ்சில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக பஸ் வந்தது. தொப்பூர் இரட்டை பாலம் அருகே கடந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பஸ் முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மற்றும் முன்பகுதி சேதம் அடைந்தது.
19 பேர் காயம்
இந்த விபத்தில் சுற்றுலா பஸ்சில் பயணம் செய்த, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் ராஜா (வயது 30) பலத்த படுகாயம் அடைந்தார். பஸ்சில் இருந்த 18 பயணிகளும் லேசான காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி மீட்பு படையினர் இணைந்து விபத்தில் சிக்கி தவித்த 19 பேரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விபத்துக்குள்ளான பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி சுங்கச்சாவடி பணியாளர்கள் சீர் செய்தனர். இந்த விபத்தால் சேலம்-தர்மபுரி சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.எல்.ஏ.க்கள் நேரில் ஆறுதல்
இதனிடையே விபத்து பற்றிய தகவல் அறிந்த எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே. மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். உடனுக்குடன் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்குமாறு டாக்டர்களிடம் வலியுறுத்தினார்கள்.
அப்போது பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, அரசு மருத்துவக்கல்லூரி டீன் அமுதவல்லி ஆகியோர் உடன் இருந்தனர்.