திம்பம் மலைப்பாதையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து
திம்பம் மலைப்பாதையில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலத்தை அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையானது தமிழகம்- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ளது. இதனால் இந்த பாைதயில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவருகின்றன. குறிப்பாக திம்பம் மலைப்பாதையில் செல்லும் கனரக வாகனங்கள் அங்குள்ள கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும், பழுதாகி நிற்பதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டன.
கவிழ்ந்தது
இந்த நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிய மினி லாரி ஒன்று புறப்பட்டது. இந்த மினி லாாியானது திம்பம் மலைப்பாதையின் 25-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி லாரியின் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இதில் லாரியில் இருந்த கரும்புகள் ரோட்டில் சிதறின. இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு கரும்பு லாரியை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இருட்டி விட்டதால் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில்பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.