விபத்துகளை ஏற்படுத்தும் போதை ஆசாமிகளால் பொதுமக்கள் அவதி


விபத்துகளை ஏற்படுத்தும் போதை ஆசாமிகளால் பொதுமக்கள் அவதி
x

உடுமலை பகுதியில் போதை ஆசாமிகள் விபத்துகளை ஏற்படுத்தி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருப்பூர்

உடுமலை பகுதியில் போதை ஆசாமிகள் விபத்துகளை ஏற்படுத்தி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மது விற்பனை

உடுமலை பகுதியில் டாஸ்மாக் சார்பில் மதுபான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்தக் கடைகளை மையமாகக் கொண்டு போதை ஆசாமிகளுக்கு ஏதுவாக பார்களும் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் விற்பனையை கண்காணித்து முறைப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் மதுபானம் உடுமலை பகுதியில் எளிதில் கிடைக்கும் பொருளாக மாறி உள்ளதால் 24 மணி நேரமும் அதன் பயன்பாடு இருந்து வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்

குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஏழை, எளிய கூலித் தொழிலாளர்கள் அன்றாட வருமானத்தின் பெரும் பகுதியை மதுபானத்திற்கு செலவழித்து வருகின்றனர். அது மட்டுமின்றி இளைய தலைமுறைகளும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். குடிபோதையில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் வாகனங்களை சாலையில் தாறுமாறாக அதிவேகத்துடன் இயக்கி வருகின்றனர்.

அப்போது சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருவது தொடர் கதையாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு உடல் ஊனமும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டு வருகிறது. மேலும் சைக்கிளில் அதிகாலையில் விளையாட்டு மைதானத்திற்கு பயிற்சி மற்றும் பள்ளிக்கு செல்கின்ற குழந்தைகளுக்கும் போதை ஆசாமிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

நடவடிக்கை

இதனால் குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படக்கூடிய சூழல் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்உடுமலை பகுதியில் தாறுமாறாக வாகனங்களை இயக்கி விபத்துகளை ஏற்படுத்தும் போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்ற மது விற்பனையை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story