மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதல்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டியை சேர்ந்த சுருளிவேல் மகன் நாகேஸ்வரன் (வயது 19). இவர் போடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே கல்லூரியில் படிக்கும் அவரது நண்பர்களான போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்த சஞ்சய் (19), தேவாரத்தை சேர்ந்த ராஜா முகமது (19) ஆகியோரும் ஒரே மோட்டார் சைக்கிளில் போடியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுநு்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போடி டவுன் போலீசார், ஜீப் டிரைவரான கேரள மாநிலம் உடும்பன்சோலையை சேர்ந்த ராசு (60) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.