நல்லம்பள்ளி அருகேசாலையோர பள்ளத்தில் சரக்கு வேன் பாய்ந்து விபத்து2 பேர் காயம்
நல்லம்பள்ளி:
பெங்களூருவில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு ஒரு சரக்கு வேன் புறப்பட்டது. இந்்த வேனை கோவை மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் (வயது 53) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரமவுலி (28) என்பவர் உடன் வந்தார். தர்மபுரி மாவட்டம் தொம்ரகாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தம் அருகே நேற்று சரக்கு வேன் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர், கிளீனர் காயம் அடைந்து தவித்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான சரக்கு வேனை போலீசார் உதவியோடு மீட்புக்குழுவினர் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
========