நல்லம்பள்ளி அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
நல்லம்பள்ளி அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் தடங்கம் டாஸ்மாக் குடோனில் இருந்து தொப்பூர் உம்மியம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று புறப்பட்டது. இந்த லாரியை எர்ரப்பட்டியை சேர்ந்த முனுசாமி (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி நல்லம்பள்ளி அருகே உள்ள சாமிசெட்டிப்பட்டியில் இருந்து பூவல்மடுவு இடையே துர்காளியம்மன் கோவில் பகுதியில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மதுபாட்டில்களுடன் சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் உள்பட 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர் லாரியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து சேதமடைந்தது. பின்னர் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதை அறிந்த, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள், கீழே கிடந்த மதுபாட்டில்களை படையெடுத்து எடுத்து சென்றனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடைந்த பாட்டில்கள் போக, மீதமிருந்த, பாட்டில்களை மாற்று லாரி மூலம் ஏற்றி சென்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.