இண்டூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பேக்கரி உரிமையாளர் பலி
பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேக்கரி உரிமையாளர் பலியானார்.
பேக்கரி உரிமையாளர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மேக்கனாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் சிவபெருமாள் (வயது 35). இவர் பாப்பாரப்பட்டி அருகே உள்ள நாகதாசம்பட்டியில் வாடகைக்கு கடை எடுத்து பேக்கரி நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பேக்கரியை மூடிவிட்டு சிவபெருமாள் தர்மபுரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இண்டூர் அருகே நத்தஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
விசாரணை
இதில் படுகாயமடைந்த சிவபெருமாளை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.