புதன் சந்தையில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலி - நண்பர் படுகாயம்
புதன் சந்தையில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலி நண்பர் படுகாயம் அடைந்தார்
சேந்தமங்கலம்:
புதன்சந்தையில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
கட்டிட மேஸ்திரி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பிற்பட்டோர் காலனியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 47). கட்டிட மேஸ்திரி. இவருடைய நண்பர் பாலுசாமி (50). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் செல்லப்பம்பட்டியில் ஒரு வீட்டு வேலைக்காக சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ரவிக்குமார் ஓட்டினார். பாலுசாமி பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது புதன்சந்தை மேம்பாலத்தில் ஏறியபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பாலுசாமி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
விசாரணை
இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் பாலுசாமியை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சேந்தமங்கலம் போலீசார் ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான ரவிக்குமாருக்கு, சுமதி (38) என்ற மனைவியும், 3 மகளும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.