கிருஷ்ணகிரியில் ஸ்கூட்டர் மீது லாரி மோதி விபத்து:துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர் பலிகலெக்டர் அலுவலக கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது பரிதாபம்


கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் பர்கூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர் பலியாகினர்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி ஆனந்த் நகரை சேர்ந்தவர் முகிலன் (வயது 44). திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி கெஜல்நாயக்கன்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மல்லிகார்ஜூனன் மனைவி பாரதி (45). இவரும், முகிலனும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை அவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முகிலனுக்கு சொந்தமான ஸ்கூட்டரில் பர்கூரில் இருந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மாலை 4.45 மணி அளவில் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்தை கடந்து பெங்களூரு சாலையில் சென்றபோது அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.

2 பேர் பலி

இதில் 2 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அப்போது பாரதியின் தலையில் லாரி சக்கரம் ஏறியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த முகிலனும் சம்பவ இடத்திலேயே பரிதாமாக இறந்தார்.

விபத்தை கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான முகிலன், பாரதி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் கலெக்டர் அலுவலக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க சென்ற 2 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விபத்தில் பலியான சம்பவம் அரசு அலுவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story