ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு
திருவோணம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவோணம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆட்டோ டிரைவர்
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள ஊரணிபுரம் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் பாரக். இவருடைய மகன் அப்துல்காதர் (வயது39). மாற்றுத்திறனாளி. இவர் அதே பகுதியில் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு அப்துல் காதர் பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டு, ஊரணிபுரத்திற்கு ஆட்டோவில் திரும்பி கொண்டிருந்தார்.
ஏனாதி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே நாய் ஓடி வந்ததால், அப்துல் காதர் பிரேக் போட்டு ஆட்டோவை நிறுத்த முற்பட்டார். அப்போது எதிர்பாராதமாக சாலையில் ஆட்டோ கவிழ்ந்தது.
போலீசார் விசாரணை
இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த அப்துல் காதரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்ட அப்துல் காதர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி அபிநிஷா (36) கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.