பாம்பன் புதிய ரெயில் பால பணியின்போது விபத்து: 3 தொழிலாளர்கள் காயம்


பாம்பன் புதிய ரெயில் பால பணியின்போது விபத்து: 3 தொழிலாளர்கள் காயம்
x

பாம்பன் ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் தூக்குப்பாலம் அமையும் இடத்தில் கிரேன் முறிந்து விழுந்தது.

ராமேசுவரம்,.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.550 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் தூக்குப்பாலம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான தளவாட பொருட்கள் படகுகளில் ஏற்றிச் சென்று கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து தூக்குப்பாலம் பணிகளுக்காக சில இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் உபகரணங்களை நாட்டுப் படகு ஒன்றில் ஏற்றி தொழிலாளர்கள் கொண்டு சென்றனர். இதுபோன்ற பொருட்களை இறக்குவதற்காக கடலுக்குள் சில ஏற்பாடுகள் செய்து கிரேன் ஒன்றை நிலை நிறுத்தி இருந்தனர். தொழிலாளர்கள் கொண்டு வந்த பொருட்களை படகில் இருந்து கிரேன் மூலம் தூக்கினார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென கிரேன் முறிந்து, அதன் ஒரு பகுதி படகு மீது விழுந்தது.

இதில் படகில் இருந்த பாம்பன் தெற்குவாடி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 50), மற்றும் கிறிஸ்டி, மாரி ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக தூக்குபாலத்தில் பணிகளில் ஈடுபட்டிருந்த மற்ற தொழிலாளர்கள் விரைந்து வந்து, படகின் மீது முறிந்து கிடந்த கிரேனுக்குள் சிக்கிக்கிடந்த தொழிலாளர்களை வேகமாக மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். ஆம்புலன்ஸ்கள் மூலம் 3 பேரையும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story