புழல் அருகே கட்டுமான பணியின் போது விபத்து: 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி சாவு - ஒப்பந்ததாரர்கள் உள்பட 3 பேர் கைது


புழல் அருகே கட்டுமான பணியின் போது விபத்து: 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி சாவு - ஒப்பந்ததாரர்கள் உள்பட 3 பேர் கைது
x

புழல் அருகே புதிய வீட்டு கட்டுமான பணியின் போது 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

சென்னை

சென்னை அடுத்த புழல் லட்சுமிபுரம் சப்தகிரி நகரை சேர்ந்தவர் டேனியல் (வயது 60). இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். இந்த கட்டிட பணியில் சென்னை கொரட்டூர் வச்சலா நகர் அக்ரகாரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (51) என்ற கட்டிட தொழிலாளி ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து பாலகிருஷ்ணன் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இது குறித்து பாலகிருஷ்ணனின் மகன் சதீஷ்குமார் புழல் போலீசில் அளித்த புகாரின் பேரில், புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹோபா தேவி வழக்கு பதிவு விசாரித்தார். அதில், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பாலகிருஷ்ணனை வேலையில் ஈடுபடுத்தி சாவுக்கு காரணமாக இருந்ததாக கூறி வீட்டு உரிமையாளர் டேனியல் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வரதராஜன் (50), பழனி (48) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story