10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 10 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தின் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
திண்டிவனம்
ஓங்கூர் பாலம்
திண்டிவனம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓங்கூர் பகுதியில் உள்ள பாலம் பழுதடைந்ததால் அதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அருகில் உள்ள இன்னொரு பாலம் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதை போலீசார் தினமும் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்காக சென்னையில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சொந்த ஊருக்கு சென்றவர்கள் நேற்று மாலை நேரத்துக்கு பிறகு மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஸ், கார், வேன் மற்றும் சரக்கு வாகனங்கள் அதிக அளவில் சென்று வந்த வண்ணம் இருந்ததால் பரபரப்புடன் காண முடிந்தது.
விபத்து
இதற்கிடையே ஓங்கூர் பகுதியில் உள்ள குபேரன் கோவில் பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்த பஸ், ஆட்டோ, கார், மினிலாரி உள்ளிட்ட 10 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓங்கூர் பாலத்தில் இருந்து இருபுறமும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
விபத்து பற்றிய தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடும் சிரமத்துடன் விபத்துக்குள்ளான 10 வாகனங்களையும் கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






