அரசு பஸ் அடியில் சிக்கிய ஆம்னி வேன் - அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்


சத்தியமங்கலம் அருகே ஆம்னி வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் அதிஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள பேக்கரி வேலை பார்த்து வருபவர் முகமது அனிஷ் (30). இவருடன் பணிபுரியும் சலீம் (25), பசீர் (28) ஆகியோர ஆம்னி வேனில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது ஆம்னி வேனை முகமது அனிஷ் ஓட்டி செல்ல பின்னால் மற்ற இரண்டு பேர் அமர்ந்து இருந்தனர்.

இந்நிலையில் பின்னால் அரசு பஸ் வருவதை கவனிக்காமல் தீடீர் எனது வலதுபுறம் ஆம்னி வேனை திருப்ப பின்னால் வந்த அரசு பஸ் நிலை தடுமாறி ஆம்னி வேன் மீது மோதியது.

இதில் ஆம்னி வேன் தலைகுப்புற பள்ளத்தில் கவிழ்ந்து, அரசு பேருந்தின் அடியில் சிக்கி கொண்டது. அருகில் இருந்த பொதுமக்கள் ஆம்னி வேனில் பின்னால் அமர்ந்து இருந்த சலீம், பசீர் ஆகியோரை வேனின் பின்பக்க கண்ணாடியை உடைத்து மீட்டனர்.

அதேசமயம் ஆம்னி வேனை ஓட்டிவந்த முகமது அனிஷ்யை மீட்க முடியவில்லை. அதனை தொடர்ந்து இரண்டு ஜே.சி.பி வாகனம் வரை வரவழைக்கப்பட்டது. பின் ஜே.சி.பி வாகன உதவியுடன் பேருந்தை தூக்கி ஆம்னி வேனில் சிக்கி இருந்த முகமது அனிஷ்சை மீட்டனர்.

விபத்தில் 3 பேருக்கும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காயம் அடைந்த மூவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.


Next Story