சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளால் அதிகரிக்கும் விபத்துகள்


சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளால் அதிகரிக்கும் விபத்துகள்
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில், சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில், சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

சாலையில் கால்நடைகள்

வால்பாறை நகரில் ஒரேயொரு மெயின் ரோடு மட்டுமே உள்ளது. இந்த மெயின் ரோட்டில்தான் அரசு பஸ்கள், தனியார் எஸ்டேட் வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வகையான வாகன போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆடு, மாடுகள் பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் மெயின்ரோட்டில் அதிகளவில் நடமாடி வருகிறது. குறிப்பாக மாடுகள் சாலையில் படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் அவற்றின் அருகில் வாகனங்கள் செல்லும்போது திடீரென எழுந்து மோதி விடுகின்றன.

அவதி

இது தவிர இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மீது கால்நடைகள் மோதி விடுவதால் கீழே விழுந்து காயமடைந்து செல்கின்றனர். இது குறித்து பலமுறை வால்பாறை நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் அவர்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

நடவடிக்கை

வால்பாறை மெயின் ரோட்டில் பகலில் மட்டுமின்றி இரவிலும் கால்நடைகள் நடமாட்டத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது நகர் பகுதியில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை பட்டிகளில் அடைத்து வைத்து வளர்ப்பதற்கு அறிவுரை வழங்க வேண்டும்.

இரவில் சாலையில் சுற்றித்திரிந்து வரும் கால்நடைகளை பிடித்து கோசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். கால்நடைகளால் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைபவர்களுக்கு சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்று தருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story