வருவாய்க்கு அதிகமாக சொத்துகள் குவித்த வழக்கு: 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை


வருவாய்க்கு அதிகமாக சொத்துகள் குவித்த வழக்கு: 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
x

வருவாய்க்கு அதிகமாக சொத்துகள் குவித்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை,

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.

இவர் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் சட்டமன்ற தொகுதிஎம்.எல்.ஏ.வாக உள்ளார்.

ரூ.58 கோடி சொத்து குவிப்பு வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக காமராஜ் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விரிவான விசாரணை நடத்தினார்கள்.

1.4.2015 முதல், 31.3.2021 வரை அமைச்சராக இருந்த கால கட்டத்தில் காமராஜ் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சுயலாபம் அடைந்து வருமானத்துக்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துகள் அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயர்களிலும் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரம் அளவுக்கு வாங்கி குவித்துள்ளது தெரிய வந்தது.

இதையொட்டி திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு மற்றும் கூட்டு சதி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

யார், யார் மீது வழக்கு

லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஜி.ஆர்.சித்ரா கடந்த 7-ந்தேதி பதிவு செய்த இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் காமராஜ் (வயது 62) அவரது மகன்கள் டாக்டர் இனியன் (32), டாக்டர் இன்பன் (30) மற்றும் சந்திரஹாசன் (62), கிருஷ்ணமூர்த்தி (51), உதயகுமார் (60) ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். என்.ஏ.ஆர்.சி என்ற ஓட்டலில் கிருஷ்ணமூர்த்தி இயக்குனராகவும், சந்திரஹாசன் மேலாண்மை இயக்குனராகவும் உள்ளனர். ஸ்ரீ வாசுதேவபெருமாள் ஹெல்த் ஹேர் லிமிடெட் என்ற நிறுவனத்தில் காமராஜின் மகன்கள் இனியன், இன்பன் ஆகியோர் மேலாண்மை இயக்குனர்களாக இருக்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் காமராஜ் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அவரது மனைவி லதாமகேஸ்வரி. காமராஜின் மகன்கள் இனியன், இன்பன் இருவரும் டாக்டர்கள். இனியன் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் டாக்டராக பணி செய்கிறார். இவரது மனைவி டாக்டர் அக்‌ஷயா. முன்னாள் அமைச்சர் காமராஜ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது மகன்கள் மற்றும் சந்திரஹாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் பெயர்களில் முறைகேடாக சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

52 இடங்களில் சோதனை

சொத்து குவிப்பு வழக்கு அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை முதல் கோவை, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 52 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னையில் 6 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்கு வீதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீடு உள்ளது. இந்தவீட்டுக்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு மதுரை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் வந்து சோதனை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் காமராஜ் வீட்டுக்கு முன்பு குவிந்தனர்.

அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள முத்துலட்சுமி என்பவரின் வீடு, பனையூரில் உள்ள அவரது கட்டுமான நிறுவன அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

நீலாங்கரை சரஸ்வதி நகர், ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் ஜிம்மி கட்டிடத்தில் உள்ள ஜி.பி.ஏ. நிறுவனம் ஆகியவற்றிலும் சோதனை நடந்தது. போயஸ் கார்டனில் பி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அருண்குமார் என்பவரின் வீடு, அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள தேசபந்து என்பவரின் நிறுவனம் போன்றவற்றிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கண்ட தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.


Next Story