மாணவர்களிடம் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு:ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்களிடம் விசாரணை


மாணவர்களிடம் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு:ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்களிடம் விசாரணை
x

ஊட்டி அரசு கலைக்கல்லூரி.

தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களிடம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையில் இருந்து வேறு துறைக்கு மாற பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்களிடம் கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர் விசாரணை நடத்தினார்.

நீலகிரி

ஊட்டி: மாணவர்களிடம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையில் இருந்து வேறு துறைக்கு மாற பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்களிடம் கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர் விசாரணை நடத்தினார்.

ஊட்டி அரசு கலைக்கல்லூரி

ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு மலை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களை சார்ந்த மாணவ-மாணவிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த கல்லூரியில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் முடிந்தது. இதில் முதல்கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பித்த பாடப்பிரிவு கிடைக்காதபோது, அடுத்து கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்துள்ளனர். இதன் பின்னர் அடுத்தடுத்த கலந்தாய்வுகளின்போது அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் காலியிடம் இருந்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு அந்த பாடப்பிரிவிற்கு மாறி உள்ளனர். இவ்வாறு ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாறுவதற்காக பேராசிரியர் ஒருவர், மாணவர்களிடம் கூகுள்பே மூலமும், ரொக்கமாகவும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பணம் வாங்கியதாக கடந்த 14-ந் தேதி குற்றச்சாட்டு எழுந்தது.

புகார்

இதைத்தொடர்ந்து கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய செல்போன் ஸ்க்ரீன் ஷாட்டுகள் மூலம் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, கல்லூரி கல்வி இயக்குனரகம், தமிழக டி.ஜி.பி. ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் புகார் பதிவு செய்து உள்ளனர்.

மேலும் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து மாணவர்களிடம் ஊட்டி மத்திய போலீசாரும் விசாரணை நடத்தினர்.

விசாரணை

இந்தநிலையில் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் இயக்குனர் ஆகியோர் உத்தரவின் பேரில் கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர் கலைச்செல்வி நேற்றுமுன்தினம் ஊட்டி அரசு கலைக்கல்லூரிக்கு நேரில் வந்து சுமார் 30 மாணவ-மாணவிகள், 4 பேராசிரியர்கள், மற்றும் கல்லூரி முதல்வரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே கோவை மண்டல கல்லூரி இணை இயக்குனர் தனது, விசாரணை அறிக்கையை 2 நாட்களுக்குள் உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்ததாகவும், அதன் பின்னர் பெண் பேராசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது துறை மாறுதலுக்கு மாணவர்களிடம் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story