"திமுக ஆட்சியில் உணவு உற்பத்தியில் சாதனை" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருச்சி,
திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண் சங்கமம் திருவிழாவை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திமுக ஆட்சியில் உழவர்களின் நலன் காக்கப்படுகிறது. வேளாண்துறையை வளர்க்க, போதிய நிதியுடன் நீர்வளமும் தேவை. அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்த திமுக அரசு உழைத்து வருகிறது. குறுவை சாகுபடியில் 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையை செய்துள்ளோம். நடப்பாண்டில் 5.36 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'உழவன் செயலி' போன்ற செயலிகள் விவசாயிகளின் வசதிக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் உணவு உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை விட அதிகமாக தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களால் கடந்த 2 ஆண்டுகளில் 6.5 லட்சம் உழவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
10 ஆண்டு அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கூடுதலாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விளைச்சலைப் பெருக்கவும், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கவும் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வேளாண்மை லாபம் தரும் தொழிலாக உயர்த்தப்பட வேண்டும். குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுகிறது.
நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளை சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். உழவர்கள் உற்பத்தியாளர்களாக மட்டுமல்லாமல் விற்பனையாளர்களாகவும் மாற வேண்டும். வேளாண் துறையை வளர்க்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 ஆண்டுகளுக்கு பின் 119.96 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உழவர் மகனாகவே மாறிவிட்டார். அனைத்து துறைகளும் ஒருசேர வளர வேண்டும் என்று திமுக அரசு உழைத்து வருகிறது. வேளாண்துறை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.