இறைச்சிக்காக விலங்குகளை சாலையோரம் வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை


இறைச்சிக்காக விலங்குகளை சாலையோரம் வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை
x

நாமக்கல் மாவட்டத்தில் இறைச்சிக்காக சாலையோரங்களில் விலங்குகளை வெட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாமக்கல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

விலங்கு வதை செய்யும் கூடம்

விலங்குகளை வதை செய்யும் கூடம் இருந்தும், சாலையோரங்களில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விலங்குகள் வதை செய்யப்படுகின்றன. அவ்வாறு விலங்குகளை வதை செய்துவிட்டு சாலையோரங்களில் அதன் கழிவுகளை விட்டுவிட்டு செல்கின்றனர்.

இதனால் தெருநாய்கள் அதை உண்பதற்காக கூட்டம், கூட்டமாக கூடி சண்டையிட்டு சாலையில் அங்கும் இங்கும் ஓடுகின்றன. இதனால் சாலையில் வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளாவதுடன் வாகனங்களில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் நாய்கள் கடித்து விடுகின்றன. எனவே அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களில் தான் விலங்குகளை வதை செய்ய வேண்டும். இதை மீறி சாலையோரங்களில் வதை செய்யும் நபர்கள் மீது அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்களை கொண்டு மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்க உதவி ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்வார்.

சட்டப்படி நடவடிக்கை

மேலும் விலங்குகளை வாகனத்தில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது விலங்குகள் போக்குவரத்து சட்ட விதிக்கு மாறாக கொண்டு செல்லப்படுவதாக புகார் வந்துள்ளது. எனவே விலங்குகளை வாகனத்தில் கொண்டு செல்லும் போது உரிய சட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

குறிப்பாக வாகனத்தில் விலங்குகள் பயணிக்கும் போது 6 செ. மீ. அளவுக்கு குறையாமல் வைக்கோல் அல்லது தேங்காய் நார் வாகனத்தில் பரப்பி விடவேண்டும். 2 விலங்குகளுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு வாகனத்தில் ஏற்ற வேண்டும். விலங்குகளுக்கு தேவையான முதலுதவி மருந்து பெட்டி வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.

விலங்குகளை வாகனத்தில் ஏற்றும் முன்பு அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவரிடம் விலங்குகள் வாகனத்தில் பயணிக்க உடல் தகுதியாக உள்ளதா ? என்பதை பரிசோதனை செய்து கால்நடை மருத்துவரிடம் சான்று பெற வேண்டும். சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டம் மற்றும் விலங்குகள் போக்குவரத்து சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story