கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்து கூறினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை


கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்து கூறினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Sept 2023 1:00 AM IST (Updated: 26 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்து கூறினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

தர்மபுரி

தர்மபுரி:

கருவில் உள்ள சிசுக்களின் பாலினத்தை கண்டறிந்து கூறுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கிராம பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீடு வாடகை எடுத்து அங்கு சட்டவிரோதமாக ஸ்கேன் எந்திரங்களை பயன்படுத்தி இடைத்தரகர்கள் மூலம் அங்கு வந்த கர்ப்பிணி களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை சிலர் கண்டறிந்து தெரிவித்து வந்துள்ளனர்.

நலப் பணிகள் துறையினர் தனிக்குழு அமைத்து இது தொடர்பாக கண்காணிப்பு பணி மேற்கொண்டு வந்தனர். சம்பந்தப்பட்ட பகுதியில் ரகசிய சோதனை நடத்தினார்கள். அப்போது கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து கூறிய கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தகவல் தெரிவிக்கலாம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் மையங்கள், ஆண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் சந்தேகத்திற்குரிய தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகிய இடங்களில் மருத்துவ குழுவினர் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வட்டார மருத்துவ அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்தகைய சோதனைகள் மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஸ்கேன் மையங்களில் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து கூறும் சட்ட விரோத செயல் நடந்தால் அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார்.


Next Story