40 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம் கலெக்டர் நடவடிக்கை
தேவகோட்டை அருகே கலெக்டர் உத்தரவின்பேரில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே கலெக்டர் உத்தரவின்பேரில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்பு
தேவகோட்டை அருகே உள்ள மருதவயல் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு 33 ஏக்கர் ஏந்தலிருந்து ஓடை வழியாக தண்ணீர் வரும். அந்த கண்மாய் நிரம்பியவுடன் உபரி நீர் ஆட்டூர், ஆதியாகுடி, கோவணி, பாரூர் வழியாக பல நூற்றுக்கணக்கான கண்மாய்களை அடைந்து அதன் பின்பு எஞ்சிய நீர் கடலுக்கு செல்லும். ஏந்தலிலிருந்து கண்மாய்க்கு நீர் வரும் ஓடையை கடந்த 40 ஆண்டுகளாக முழுமையாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். அந்த கிராம மக்கள் பல்வேறு முறை உயர் அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு கொடுத்து வந்தனர். இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டு ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து அப்போதைய தேவகோட்டை வட்டாட்சியர் ராஜரத்தினம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட ஓடை ஆக்கிரமிப்பை அகற்றினார்.
அகற்றம்
இந்நிலையில் அந்த ஓடையில் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் விட்டுவிட்டதை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அவர் தேவகோட்டை கோட்டாட்சியருக்கு முழுமையாக ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார்.
அதன் பேரில் வருவாய் ஆய்வாளர் தனசேகரன், கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஓடையை அகற்றினர். இதற்கு அந்த கிராம மக்கள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.