மாவட்ட வளர்ச்சிக்கான கூட்டத்தில் கலந்துகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை


மாவட்ட வளர்ச்சிக்கான கூட்டத்தில் கலந்துகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை
x

மாவட்ட வளர்ச்சிக்கான கூட்டத்தில் கலந்துகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சி.என்.அண்ணாதுரை எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

திருவண்ணாமலை

மாவட்ட வளர்ச்சிக்கான கூட்டத்தில் கலந்துகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சி.என்.அண்ணாதுரை எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

மேற்பார்வைக்குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வைக்குழு கூட்டம் நடந்தது.

குழு தலைவர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, குழுக்கூட்டத்தின் துணைத்தலைவர் விஷ்ணுபிரசாத் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் முருகேஷ் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஜோதி, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை எம்.பி. பேசியதாவது:- மக்கள் நலனுக்காக திட்டம் தீட்டப்படுகிறது. அதிகாரிகள் அதை செயல்படுத்துகின்றனர். ஆனால் மக்கள் தங்களது கோரிக்கைகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கையாக தெரிவிக்கின்றனர். எனவே மக்களை நேரடியாக சந்திக்கும் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் முன்கூட்டியே கலந்தாலோசித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்.

அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய முக்கிய இடங்களில் திட்டங்கள் சார்ந்த பேனர்கள் வைக்க வேண்டும். இதுபோன்ற முக்கிய கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வாறு கலந்துகொள்ளாத அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் பேசியதாவது:-

வெள்ளத்தால் பயிர்கள் சேதமானது. இதற்கான இழப்பீடு தொகை மக்களை சென்றடையவில்லை. போளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை விவசாய பணியில் ஈடுபடுத்த வேண்டும். அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளுக்கு திட்டத்தின் செயல்பாடுகளை தெரிவிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தாமலேயே பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். போளூர் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

விழிப்புணர்வு

வங்கியில் கடன் உதவி கேட்பவர்களுக்கு கடன் உதவி வழங்க வேண்டும். குறிப்பாக படித்த பட்டதாரிகள், முதல் தலைமுறை பட்டதாரிகள் கடன் உதவி கேட்டால் அவை வழங்க வேண்டும். அனைவரும் பயன்பெறும் வகையில் கடன் உதவி வழங்க வேண்டும். கடன் உதவி பெறுவது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஜவ்வாதுமலையில் மத்திய அரசு திட்டத்தில் மக்கள் வீடு கட்டிக்கொள்ளும் போது பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து சிமெண்டு வாங்கிக்கொண்டு செல்ல வேண்டி உள்ளது. எனவே, அங்கு சிமெண்டு குடோன் அமைக்கப்பட வேண்டும். ஜவ்வாதுமலை கிராமங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப்சிங், மாவட்ட வன அலுவலர் அருண்லால், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதிராமஜெயம், மகளிர் திட்ட அலுவலர் சையித் சுலைமான், ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story