கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் கோரிக்கை


கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் கோரிக்கை
x

விளாத்திகுளம் அருகே வேம்பாரில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே வேம்பாரில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல் அரிப்பு

விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடற்கரை பகுதியில் 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். இங்குள்ள மீனவர்கள் 700-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலமாக மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் இந்த கடற்கரை பகுதியில் ஏற்பட்ட கடல் அரிப்பு மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவ மக்கள் கடுமையான பாதிக்குள்ளாகி வந்தனர். கடல் கொந்தளிப்பு காரணமாக படகுகள் சேதமடைவதை தவிர்க்கவும், கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கவும் தூண்டில் வளைவு கல் பாலம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தூண்டில் வளைவு

மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று வேம்பாரில் ரூ.14.20 கோடி மதிப்பிலும், கீழ வைப்பாரில் ரூ.11.75 கோடி மதிப்பிலும் தூண்டில் வளைவு கல் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வேம்பார் கடற்கரையில் இருந்து கடலுக்குள் மொத்தமாக 870 மீட்டர் தொலைவுக்கும், கீழ வைப்பார் கடற்கரையில் இருந்து கடலுக்குள் 750 மீட்டர் தொலைவுக்கும் பெரிய கருங்கற்களை கொண்டு 2015-ல் தொடங்கிய தூண்டில் வளைவு கல் பாலம் அமைக்கும் பணி 2017-ல் நிறைவடைந்தது.

இதில், வேம்பாரில் அமைக்கப்பட்ட கல் பாலம் 3 பிரிவுகளாக அமைந்துள்ளது. 1-வது கல் பாலம் கடலுக்குள் 170 மீட்டர் தொலைவுக்கும், 2-வது பாலம் கடலுக்குள் 200 மீட்டர் தொலைவுக்கும், 3-வது பாலம் கடலுக்குள் 500 மீட்டர் தொலைவுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3-வது கல் பாலம் கடற்கரை மாதா கோவிலுக்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதனருகில் மீன்பிடி இறங்கு தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் அமைக்கப்படும்போது இது சரியான இடத்தில் அமைக்கப்படவில்லை. மாற்று இடத்தில் அமைக்கப்பட வேண்டுமென்று இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

பணிகளை விரைந்து முடிக்க....

இந்தநிலையில் புதிதாக அமைக்கப்பட்ட கல் பாலத்தின் மூலம் வேம்பார் கடற்கரையின் கிழக்கு பகுதியில் கடல் அரிப்பு குறைந்து இருந்தாலும், மேற்கு பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 200 மீட்டர் வரை கடல் அரிப்பு ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்ட மீன் கம்பெனிகள் சேதமடைந்துள்ளன. இன்னும் கடலில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள அரசு டீசல் பங்க், கடல் போலீஸ் நிலையம் மற்றும் வயர்லஸ் டவர் ஆகியவை கடல் அரிப்பின் காரணமாக கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.

அதுமட்டுமல்லாது அருகே உள்ள மீனவ குடியிருப்புகளும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக துரிதமான நடவடிக்கை எடுத்து கடல் அரிப்பை தடுக்க கூடுதலாக மேற்கு பகுதியில் ஒரு தூண்டில் வளைவு கல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென்று இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, தமிழக அரசு சார்பில் கடலோரத்தில் இருக்கும் அரசு டீசல் பல்க் எதிரே சுமார் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கற்கள் போடும் பணி தொடங்கப்பட்டது ஆனால் அவையும் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளதாகவும், அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும், மேலும் மீன்பிடி இறங்கு தளத்தில் சுமார் 20 படகு மட்டும் தற்போது நிற்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால், அதன் நீளத்தை அதிகரித்து அதிகமான படகுகள் நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story