விவசாயிகளை அவதூறாக பேசிய செங்கம் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


விவசாயிகளை அவதூறாக பேசிய செங்கம் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

ஏரி மண் கடத்தலை தடுத்த விவசாயிகளை அவதூறாக பேசிய செங்கம் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் இன்று தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

இதில் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

உரங்கள் தட்டுபாடின்றி வழங்க நடவடிக்கை வேண்டும். பி.எம். கிசான் திட்டத்தின் மூலம் உதவித் தொகை விவசாயிகளுக்கு முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விலையில்லா மணிலா விதையை முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.

நார்த்தாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன் வசதி, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

ஏரி மண் கடத்தலை தடுத்த விவசாயிகளை அவதூறாக பேசிய செங்கம் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story