பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டிடம் இளம்பெண்ணின் பெற்றோர் புகார் மனு அளித்தனர்.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலை வகித்தார். போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று அதுகுறித்து கேட்டறிந்தனர்.

பாலியல் பலாத்காரம்

கூட்டத்தில் காட்பாடியை சேர்ந்த இளம்பெண்ணின் பெற்றோர் அளித்த மனுவில், எனது மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வேலூரை சேர்ந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுபற்றி கேட்டதற்கு வாலிபரும், அவருடைய தந்தையும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வேலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெற்றோர் அளித்த மனுவில், எங்களது மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. எங்களை செல்போனில் மர்மநபர் தொடர்பு கொண்டு மகளை பற்றி அவதூறாக பேசி வருகிறார். மேலும் எங்களது மகளை பற்றி மாப்பிள்ளையிடம் தவறாக கூறி திருமணத்தை நிறுத்திவிடுவேன் என்று மிரட்டி வருகிறார். அந்த மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

கணவரை மீட்டுத்தர...

பள்ளிகொண்டாவை சேர்ந்த நர்சிங் மாணவி அளித்த மனுவில், நான் நர்சிங் படிக்கும் போது அதே பகுதியை சேர்ந்த உறவினர் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. சில மாதங்கள் இருவரும் காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டோம். திருமணமாகி 3 மாதங்கள் ஆன நிலையில் கடந்த ஒருமாதமாக எனது கணவரை காணவில்லை. அவரின் பெற்றோர் சென்னையில் அடைத்து வைத்துள்ளனர். வாலிபரின் தந்தை வீட்டிற்கு வந்து மிரட்டுகிறார். எனது காதல் கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

குடியாத்தத்தை அடுத்த கனககுட்டையை சேர்ந்த அன்பரசி அளித்த மனுவில், அரசு சார்பில் வழக்கப்பட்ட பட்டா நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறேன். எனக்கு 4 குழந்தைகள் உள்ளனர். எனது வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையை மறித்து ஒருவர் மாடுகளை கட்டி வைத்துள்ளார். அதனால் அந்த வழியாக செல்ல முடியவில்லை. இதுபற்றி கேட்டதற்கு மிரட்டல் விடுகிறார். இதுகுறித்து குடியாத்தம் போலீசில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தநபர் மீது நடவடிக்கை எடுத்து வீட்டிற்கு செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார்.


Next Story